மே மாசம் 98-ல்.. திருச்சி ரயில் நிலையத்தில் நடனம் - இளம்பெண்கள் மீது வழக்குப்பதிவு?
ரயில் நிலையத்தில் நடனமாடி இளம்பெண்கள் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரீல்ஸ் வீடியோ
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் "மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே" என்ற பாடலுக்கு 3 இளம் பெண்கள் நடனம் ஆடினர். அதேபாடலுக்கு ரயில்வே மேம்பாலம் மற்றும் சாலைகளிலும் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரீல்ஸாக பதிவிட்டனர்.
பொதுவாக பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் முன் அனுமதி இல்லாமல் இது போன்ற வீடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம்பெண்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
போலீசார் நடவடிக்கை
மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது? என்று கருத்துகளை பதிவிட தொடங்கினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணை, அந்த இளம்பெண்கள் திருச்சி தில்லை நகரை சேர்ந்த நடன பள்ளி மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காமல் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பாக சம்பவத்தன்று அந்த 3 பேருக்கும் ரூ.1120 அபராதம் விதித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது சம்பந்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.