யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு ஆபத்து? துணை முதல்வர் எதிர்ப்பால் பரபரக்கும் உத்தரபிரதேசம்
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்கும் துணை முதல்வர் கே.பி.மெளரியாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
உத்தரபிரதேசம்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 2019 தேர்தலில் தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக இந்த தேர்தலில் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
குறிப்பாக பாஜகவின் கோட்டை என கருதப்படும் உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. பாஜகவின் கனவு திட்டமான ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்து பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் பாஜக பின்னடைவு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கையே இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம் என்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்கும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில் துணை முதல்வர் கே.பி.மெளரியா நேற்று முன்தினம் (16-07-2024) பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டாவைச் சந்தித்துப் பேசினார். உத்தரபிரதேச இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து பேசியதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக புகார்களை தெரிவிக்க இச்சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து, உத்திரபிரதேச பா.ஜ.க மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பரப்பரப்பான சூழ்நிலையில், உத்திர பிரதேச அமைச்சரவையை நேற்று (17-07-24) யோகி ஆதித்யநாத் கூட்டினார். இந்தக் கூட்டத்தை துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா புறக்கணித்துள்ளார்.
கே.பி.மெளரியா
இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “அரசை விட கட்சி தான் பெரியது. லக்னோவில் உள்ள எண்.7, காளிதாஸ் சாலையில் உள்ள எனது இல்லத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கும். நான் முதலில் பாஜ தொண்டன், அதன் பின்னர் துணை முதல்வர் பதவி எல்லாம். அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள்,மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும். தொண்டர்களின் வலி எனக்கும் வலி. கட்சியை விட பெரியவர்கள் யாரும் இல்லை. தொண்டர்களே பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தலைவர்களை சந்தித்த பின் இவர் வெளியிட்ட இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. இந்த சூழலில் ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை நேற்று இரவு யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பின் உத்திரபிரதேச அமைச்சரவையிலும் கட்சியிலும் மாற்றம் நடக்கும் என சொல்லப்படுகிறது.