பட்டப்படிப்பு படித்திருந்தால் மாதம் ரூ.10,000 - முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
மஹாராஷ்டிராவில் பட்டப்படிப்பு முடித்துள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான சலுகைகளை அரசு அறிவித்திருந்தது.
பெண் வாக்காளர்களை கவர `லாட்லி பெஹ்னா யோஜனா' என்ற திட்டத்தை துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் படி 21 வயது முதல் 65 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏக்நாத் ஷிண்டே
இந்நிலையில் பந்தர்பூரில் நடைபெற்ற ஆஷாதி ஏகாதசியில் கலந்து கொண்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இளைஞர்களை கவர 'லாட்லா பாய் யோஜனா' என்ற புதிய நிதியுதவி திட்டத்தை அறிவித்து இருக்கிறார். இந்த திட்டத்தின் படி 12-வது படித்த இளைஞர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும், டிப்ளமோ படித்திருந்தால் மாதம் 8 ஆயிரமும், பட்டப்படிப்பு படித்திருந்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
மாணவர்களின் ஆரம்பகால பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள இந்த திட்டம் பயன்படும் எனவும், மேலும் இளைஞர்கள் தொழிற்சாலையில் பயிற்சி வேலையில் சேர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.