லண்டனை விட 2 மடங்கு பெருசு; வேகமாக நகரும் பனிப்பாறை - அபாயம்!
பனிப்பாறை கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பனிப்பாறை
அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கடலோரத்தில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லண்டன் மாநகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகா கண்டத்தை விட்டு பிரிந்துள்ளது. இது ஜார்ஜியா தீவை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் அபாயம்
சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் பனிப்பாறை நகர்வதை உறுதி செய்துள்ளன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன் இந்த பனிப்பாறையில் தான் ஆராய்ச்சி நிலையத்தை நடத்தியது. இந்த பனிப்பாறை கடந்த 37 வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது.
ஜார்ஜியா தீவினை நோக்கி இந்த பனிப்பாறை சென்றால், அண்டார்டிகாவின் வனவிலங்குகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்லாயிரம் உயிரினங்கள், பென்குயின்கள் மற்றும் கடற்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே பனிப்பாறை நிபுணர் ஆலிவர் மார்ஷ் தெரிவித்துள்ளார்.