610 கிலோ to 63 கிலோ - உலகின் அதிக எடை கொண்ட மனிதர் ஃபிட் ஆனது எப்படி?
610 கிலோ எடையுடன் உலகின் அதிக எடை கொண்ட நபராக அறியப்பட்டவர், தற்போது தனது உடல் எடையை 63 கிலோவாக குறைத்துள்ளார்.
உலகின் அதிக எடையுள்ள மனிதர்
உலகெங்கிலும் மக்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. லான்செட் மருத்தவ இதழின் தகவல் படி தற்போது, 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த 33 வயதான காலித் பின் மொஹ்சென் ஷாரி (Khalid bin Mohsen Shaari) என்பவர் 610 கிலோ எடையுடன், உலகின் அதிக எடையுள்ள நபராக அறியப்பட்டார்.
எடை குறைப்பு
2013 ஆம் ஆண்டு இவரின் உடல் எடை 610 கிலோவாக இருந்துள்ளது. அதிகப்படியான உடல் எடை காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, தனது அடிப்படைத் தேவைகளுக்கு கூட நண்பர்களையும் குடும்பத்தினரையும் நம்பியிருந்தார்.
அவரின் நிலையை கண்ட சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லா, அவருக்கு இலவசமாக உயர் மட்ட சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதன்படி 30 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. காலித், ஜசானில் உள்ள அவரது வீட்டிலிருந்து ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டிக்கு ஃபோர்க்லிஃப்ட் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட படுக்கையைப் பயன்படுத்தி கொண்டு செல்லப்பட்டார்.
இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி திட்டம் மற்றும் தீவிர பிசியோதெரபி ஆகியவை மூலம் 6 மாதத்தில் தனது உடல் எடையை பாதியாக குறைத்தார். அதிக எடை காரணமாக படுத்த படுக்கையாக இருந்த காலித், 2023 ம் ஆண்டு தனது உடல் எடையில் 542 கிலோ குறைத்து, 63.5 கிலோ எடையுடன் சகஜமாக நடமாட தொடங்கியுள்ளார்.