INDvAUS: அவருக்காக உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் - ரோஹித் ஷர்மா!
ராகுல் டிராவிட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வது எங்களது கடமை என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்
உலகக்கோப்பை
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. எனவே, இன்று (நவம்பர் 19) நடக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியானது குஜராத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தின் நடைபெறுகிறது. இம்முறை உலகக்கோப்பையை இந்திய அணி தட்டித்தூக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ராகுல் டிராவிட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வது எங்களது கடமை என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட்டிற்காக..
அவர் கூறியதாவது "இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய காரியங்களை ராகுல் டிராவிட் செய்துள்ளார். அவருடைய வேலை கண்டிப்பாக பெரியதாக இருக்கிறது. ராகுல் எப்படி கிரிக்கெட்டில் விளையாடினார் என்பதையும் நான் எப்படி விளையாடுகிறேன் என்பதும் உங்களுக்கு தெரியும்.
வெளிப்படையாக அது மாறுபட்டது. ஆனாலும் நாங்கள் விளையாட விரும்பும் வழியில் சென்று சுதந்திரமாக விளையாடுவதற்கு போதுமான ஆதரவை கொடுப்பது அவரைப் பற்றி நிறைய சொல்லும். குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று தோல்வியை சந்தித்த கடினமான நேரங்களில் அவர் அணி வீரர்களுக்காக நின்றார்.
அது போன்ற கடினமான நேரங்களில் அவர் ரியாக்ட் செய்து அதை இந்திய வீரர்களுக்கு தகவல்களாக கொடுத்த விதம் உதவியாக இருந்தது. உலகக்கோப்பையை வெல்லும் நிகழ்வில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பது ராகுல் டிராவிட் ஆசை. அவருக்காக நாங்கள் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.