தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 பேர் மயக்கம் - தொழிலாளி பலியான சோகம்!
தொழிற்சாலையில் கழிவுநீரை சுத்தம் செய்யுமுன் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகள் மயக்கமடைந்தனர், அதல் ஒருவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை
வேலூர் மாவட்டம், சதுப்பேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன், இவருக்கு 31 வயது. இவரது மனைவி ஷீலா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.
நேற்று இரவு இவருடன் சேர்ந்து ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோர் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் பலி
இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் 4 பெரும் மயக்கமடைந்தனர்.
இதில் செந்தமிழ் செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர்.
இதனை கண்ட சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.