மர்மமான முறையில் மீன்கள் கொத்து கொத்தாக இறப்பு - பொதுமக்கள் அச்சம்
சென்னை எண்ணூரில் தாமரைக்குளம் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர் வ.உ.சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக தாமரைக்குளம் இருந்து வருகிறது. அதில் மீன்கள் பிடித்து அருகில் உள்ள மீனவர்கள் விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பார்த்து வந்தனர்.
தற்போது இன்று திடீரென மீன்கள் அனைத்தும் செத்து மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் இறந்த மீன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தக் குளத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம். மீன்களை விற்று அதில் வரும் 100 ,500 ரூபாய் வைத்துதான் உணவு உட்கொண்டு வருகிறோம்.
அக்கம் பக்கத்தில் இருக்கும் கழிவுநீரை இந்த குளத்தில் விடுவதாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை குப்பைகள் கொட்டப்படுகின்றன அதற்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தற்போது கருப்பு கலரிலான மீன்கள் அனைத்தும் வெள்ளையாக மாறி இருக்கின்றன. ரசாயன கலவை ஏதாவது கலந்து உள்ளதா அல்லது மருந்துகள் கொட்டப்பட்டு உள்ளதா என அதிகாரிகள் விசாரித்து உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நீரினால் அருகிலுள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.