அது மட்டும் நடந்தால் என் மகனை மன்னிக்கவே மாட்டேன் - ஜோ பைடன் ஆவேசம்
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகனை மன்னிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார்.
ஹண்டர் பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் மீது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்க முயற்சித்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக டெலாவேர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ஹன்டர் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு தாராள அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களால் அதை வாங்க முடியாது.
ஜோ பைடென்
இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் 'போதைப் பொருள் பழக்கம் கிடையாது' என்று ஹன்டர் பைடன் பொய்யாகக் கூறியதாக அவர் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த வழக்கில் தனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் என் அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.