முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல்-ஹமாஸ் போர்? ஜோ பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
காசாவில் போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார்.
ஹமாஸ் தாக்குதல்
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்றதுடன் மட்டுமில்லாமல், இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
ஹமாஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என கடந்த 7 மாதங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன, காசா பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 35000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் பதிலடி
போரின் காரணமாக எகிப்தின் எல்லையான ரபாவில் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தஞ்சமடைந்தனர்.
சில நாட்களுக்கு முன் இங்கு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. ஐ.நா மன்றம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்தனர். சமூக ஊடகங்களில் பெரும் கண்டனம் எழுந்தது.
ஜோ பைடன் திட்டம்
இந்நிலையில் நேற்று (31 மே ) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, இஸ்ரேல்-ஹமாஸ் போர் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது. இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்வது தொடர்பான திட்டம் ஒன்றை முன் மொழிந்ததுள்ளது. இதில் முதல் 6 வாரங்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்தபடும்.
அதன் பின் காசா பகுதியில் உள்ள இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படும், பணயக்கைதிகளாக உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் திட்டம் உள்ளது. இத்திட்டம் குறித்து கத்தார் நாட்டின் மூலமாக ஹமாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும், ஹமாஸ் அமைப்பினர் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என பேசியுள்ளார்.