அனைத்து கண்களும் ரஃபா மீதா? அன்று உங்கள் கண்கள் எங்கே.. இஸ்ரேல் பதிலடி
ஒரு குழந்தையின் முன் துப்பாக்கியுடன் ஹமாஸ் பயங்கரவாதி நிற்பது போன்று, சித்தரிக்கப்பட்டுள்ள படத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதல்
ஹமாஸ் என்ற அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டு தடை செய்துள்ளது. ஹமாஸ் கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பொதுமக்கள் உள்பட 1160 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். போர் காரணமாக குடிநீருக்கும், உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். இதற்காக உணவு, குடிநீர் தேடி எகிப்து எல்லையான ரஃபாவில் பாலஸ்தீன மக்கள் குவிந்துள்ளனர்.
ரஃபா தாக்குதல்
காசாவின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய இஸ்ரேல், ரஃபா நகரை தனது கடைசி இலக்காக வைத்து தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதால் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா மன்றம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்குள்ள அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
இதன்பின், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை மையமாக வைத்து 'அனைத்து கண்களும் ரஃபா மீது' (All Eyes On Rafah) என்ற பெயரில் ஒரு புகைப்படம் வைரலானது. லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் ரபாவில் தங்கியிருப்பதை குறிக்கும் வகையில், மலைகளால் சூழப்பட்ட பாலைவன உள்ள கூடாரங்களை அந்த புகைப்படம் சித்தரிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் அரசாங்கம் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அந்த படத்தில், ஹமாஸ் பயங்கரவாதி, ஒரு குழந்தையின் முன் துப்பாக்கியுடன் நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் 'அக்டோபர் 7 அன்று உங்கள் கண்கள் எங்கே இருந்தன? ( where were your eyes on october?)' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தற்போது இஸ்ரேல் ஆதரவாளர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.