களமிறங்கும் ரோபோ போலீஸ்; பெண்களுக்கு இனி பயமில்லை - என்ன செய்யும்?
24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ போலீஸ் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோ போலீஸ்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்ற நிகழ்வு இடங்களிலும் அவசர காவல் உதவிக்காக, பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக 'ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்" (ரோபோ போலீஸ்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த பாதுகாப்பு சாதனத்தில் 24 மணி நேரமும் 360 டிகிரியில் பல மீட்டர் தூர துல்லிய கண்காணிப்பு பதிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேரடி காணொளி காட்சி பதிவு, குரல் தொடர்பு பதிவுகள், போலீஸ் துறையுடன் ஆபத்தில் உள்ள பொதுமக்கள் உரையாடும் வசதி, அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி,
என்னென்ன வசதிகள்?
உயர் தர நவீன வீடியோ கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி, ஜி.பி.எஸ். வசதி, மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு அழைப்பிற்கு உதவிடும் விரைவான நடவடிக்கைகள், உயிர் காக்கும் செயல்பாடுகளுடன் தகுந்த திறன் பயிற்சியுடன் கூடிய போலீஸ்துறையினர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சாதனத்தில் உள்ள ஒரு சிவப்புநிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பு வரும். அருகில் உள்ளவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சப்தம் ஏற்படுத்தி உதவும்.
ஆபத்தில் உள்ளவருக்கு வீடியோ கால் மூலம் நேரடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள முடியும். ரோந்து போலீஸ் வாகனங்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் நிகழ்வுகளை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்தடைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும்,
கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை கொண்டு புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தொழில்நுட்ப வசதிகள் இடம் பெற்றுள்ளன. சென்னை போலீஸ் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்கள் கொண்ட 4 மண்டலங்களில் தலா 50 இடங்களில் மொத்தம் 200 போலீஸ் ரோபோ சாதனத்தை நிறுவிட போலீஸ் அதிகாரிகள் மூலம் கள ஆய்வு நடத்தி விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் ரெயில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள், பூங்காக்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்புக்காக போலீஸ் ரோபோ சாதனங்கள் வருகிற ஜூன் மாதம் முதல் நிறுவப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.