மாதவிடாய் நேரத்தில் துணி - இங்குதான் மிகக் குறைவாம்!
மாதவிடாய் காலத்தில் துணிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய்
தேசிய குடும்ப நல ஆய்வு 2019-21இன்படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 12.7 சதவீதம் பேர்தான் தமிழ்நாட்டில் மாதவிடாய் காலத்தில் துணிகளைப் பயன்படுத்துகின்றனர். தலைநகர் டெல்லியை விட இது குறைவு.
டெல்லியில் 15.9 சதவீதம் பேரும், பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசத்தில் 69.4 சதவீதம் பேரும், பீகாரில் 67.5 சதவீதம் பேரும், குஜராத்தில் 51.5 சதவீதம் பேரும் துணியை பயன்படுத்துகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
இதற்கு முக்கிய காரணம் தமிழக பெண்களிடம் இருக்கும் விழிப்புணர்வும், அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களும்தான். தமிழகத்தை பொறுத்தவரை இந்த காலகட்டத்தில் பெண்கள் தன் சுத்தத்தை ஊக்குவிக்க பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கும், நகர்ப்புற பள்ளி மாணவியர்களுக்கும், அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறைகளில் உள்ள பெண் கைதிகள், மன நலக் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.60.58 கோடி அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், ஏறத்தாழ 6 கோடி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.