43 ஆண்டுகள் சிறை; செய்யாத குற்றத்துக்கு பலியான பெண் - உண்மை வெளியானது எப்படி?
செய்யாத குற்றத்துக்காக பெண் ஒருவர் 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
செய்யாத குற்றம்
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் செயின்ட் ஜோசப் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ரிசியா ஜெஷ்கே. இவர் நூலகப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் கடந்த 1980ஆம் ஆண்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சாண்ட்ரா ஹெம்மி என்ற 20 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்தக் கொலைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். இறுதியில் இந்த வழக்கின் விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
செய்யாத ஒரு கொலைக்காக இந்த பெண் 43 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். இதன்மூலம், அமெரிக்க வரலாற்றில் செய்யாத குற்றத்துக்காக நீண்டகாலம் தண்டனை அனுபவித்த ஒரே பெண் இவராகத்தான் இருப்பார் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.
தற்போது 64 வயதான அவருக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கொலை குற்றத்தில் அவரைத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் இல்லை என அவரது வழக்கில் மறு ஆய்வு செய்யப்பட்டது.
சிறை தண்டனை
அதாவது, சிறு வயதில் இருந்து ஹெம்மிக்கு மனநலக் கோளாறு இருந்துள்ளது.இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் கொலை சம்பவம் நடைபெற்றபோது, அவர் ஒரு மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டு,
அவருக்கு ஆன்டிசைகோடிக் மற்றும் சக்தி வாய்ந்த மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தடுமாறியப்படியே பதில் அளித்திருக்கிறார். இந்த ஆதாரத்தை மட்டுமே வைத்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
அதன்படி தண்டனையும் கிடைத்துள்ளது. தற்போது இது ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவரை விடுதலை செய்தது. இதன்பிறகு விடுவிக்கப்பட்ட ஹெம்மி, தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அதேநேரத்தில், இந்தக் கொலை வழக்கில் போலீஸ் ஒருவருக்கு நேரடி தொடர்பிருந்ததாகவும்,
அதை அப்போதைய அதிகாரிகள் நிராகரித்ததாகவும் சமீபத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரி, தன்னுடன் பணியாற்றிய மைக்கேல் ஹோல்மன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்தும் அதைப் புறக்கணித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.