வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி; கதவை திறந்த சகோதரருக்கு அதிர்ச்சி - வெறிச்செயல்!
வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி கொலை செய்யப்பட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரி கொலை
கர்நாடகா மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராக பிரதிமா (45) என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். இவர் பெங்களூர் சுப்ரமணியபோரா என்ற பகுதியில் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவரும் மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்றதால் நேற்று இரவு பிரதிமா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் பிரதிமாவின் சகோதரர் அவரை பல முறை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லை.
இதனையடுத்து இன்று காலை பிரதிமாவின் வீட்டிற்கே அவரின் சகோதரர் நேரடியாக சென்றுள்ளார். அப்போது பிரதிமா உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
தீவிர விசாரணை நடைபெறும்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக அங்கு வந்த போலீசார் பிரதிமாவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தடயவியல் துறையினர் பிரதிமாவின் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெண் உயரதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.