பரிகாரம் செய்தும் ஜோதிடம் பலிக்கவில்லை - ஆத்திரத்தில் ஜோதிடரை கொன்ற பெண்
ஜோதிடர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோதிடம்
திருமணம், தொழில், கல்வி நிமித்தமாக பலரும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஜோதிடம் பார்ப்பது உண்டு. சிலருக்கு இந்த பரிகாரம் அல்லது பூஜை செய்தால் இது நடக்கும் என ஜோதிடர் ஆலோசனை கூறுவார்.
சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்தது நடக்கும். பலருக்கும் நடக்காமல் போகும். அதே போல் பெண் ஒருவர் பரிகாரம் செய்தும் எதிர்பார்த்த விஷயம் நடக்காததால் ஆத்திரத்தில் ஜோதிடரை கொலை செய்துள்ளார்.
ஜோதிடர் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (64). கடந்த 8 ஆம் தேதி ஜான் ஸ்டீபனின் மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமாரி உடனடியாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஸ்டீபனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் ஸ்டீபனின் கழுத்து நெரிக்கப்பட்டும், தலையில் அடித்தும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
கணவருடன் சண்டை
இந்த வழக்கில் கன்னியாகுமரி, கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி(43), திருநெல்வேலி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜன்(25) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், "கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் கலையரசி, தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்க்க ஜோதிடர் ஜான்ஸ்டீபனை அணுகிள்ளார்.
சில பரிகாரங்கள் செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என கூறிய ஜோதிடர் ஜான் ஸ்டீபன் அதற்காக ரூ.9.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜோதிடர் கூறிய பரிகாரங்கள் செய்த பின்பும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்துள்ளது.
ரூ.9.5 லட்சம்
இதுகுறித்து ஜோதிடர் ஜான் ஸ்டீபனிடம் தெரிவித்த கலையரசி, பரிகாரத்துக்காக கொடுத்த 9.5 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார். அவர் பணத்தை திருப்பி தர மறுத்துள்ள நிலையில் அவரை கொலை செய்ய கலையரசி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தன்னுடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய நெல்லை மாவட்டம் கருவேலகுளத்தைச் சேர்ந்த நம்பிராஜனை தொடர்பு கொண்டு கொலை செய்ய அவருக்கு பணமும் அளித்துள்ளார். இருவரும் இணைந்து கடந்த 8 ஆம் தேதி ஜோதிடரை துண்டால் கழுத்தை இறுக்கியும், தலையை தரையில் அடித்தும் கொலை செய்துள்ளனர்.