36 ஆண்டுகளாக... ஒரே அறையில் சங்கிலியால் அடைக்கப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்!
பெண் ஒருவர் 36 ஆண்டுகளாக சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப வன்முறை
உத்தரப்பிரதேசம், ஃபிரோசாபாத் துண்ட்லா பகுதியைச் சேர்ந்தவர் 53 வயது பெண். 17 வயது முதல் 36 ஆண்டுகளாக குடும்பத்தில் உள்ளவர்களால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். சமீபத்தில், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை, பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அஞ்சுலா மஹூரின் தலைமையில் சேவா பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் விடுவித்தது.

தற்போது, அந்த பெண் ஆக்ராவில் உள்ள மனநல மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக ஆக்ரா மனநல காப்பகத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தினேஷ் ரத்தோர், பெண் குணமாக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பெண் பாதிப்பு
"ஃபிரோசாபாத்தில் இருந்து 53 வயதுடைய பெண் மீட்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டார். 36 ஆண்டுகளாக அவரை சங்கிலியால் பிணைத்து, குடும்பத்தினரே சிறை வைத்துள்ளனர். அந்தப் பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். "அந்தப் பெண் இங்கு அழைத்து வரப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

ஆடை மிகவும் அழுக்காக இருந்தது. என்.ஜி.ஓ உறுப்பினர்கள் அவளைக் குளிப்பாட்டி, சுத்தமான ஆடைகளை வாங்கிக் கொடுத்தார்கள். தற்போது அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
சில வாரங்களில் குணமாகிவிடும் வாய்ப்பு உள்ளது" என்றும் கூறினார்.
தொடர்ந்து, 36 ஆண்டுகளாக ஒரே அறையில் சங்கிலியால் அடைத்து வைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, கதவு இடுக்கின் வழியாகவே உணவு வழங்கப்பட்டது என கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.