47 வயதில் கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண் - ஆசையை நிறைவேற்றிய தமிழக அரசு!
கரூரில் 47 வயதான ஒரு பெண் தனது மகன் மகளுடன் கல்லூரிக்கு சென்று படிக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
படிக்கும் ஆசை
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா, 47 வயதான இவருக்கு கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது இவரும் கரூரில் உள்ள ஐ.டி.ஐ.க்கு படிக்க செல்கிறார். 32 ஆண்டுகளுக்கு பிறகு இவருக்கு படிக்கவேண்டும் என்ற ஆசையை தூண்டியது தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்தான் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறித்து கேள்விப்பட்ட கவிதா தற்போது ஐ.டி.ஐ.யில் தையல் பயிற்சி படித்துக் கொண்டு மாதம் 1,000 ரூபாய் அரசின் ஊக்கத் தொகையையும் பெற்று வருகிறார்.
பேட்டி
இந்நிலையில், இவர் கூறுகையில், "பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க பெற்றோர் அனுமதிக்காத காரணத்தால் படிப்பை கைவிட நேர்ந்தது. ஒரு சில ஆண்டுகளில் திருமணமும் நடந்தது. கிட்டத்தட்ட நான் பாடப்புத்தகங்களை தொட்டு 32 ஆண்டுகள் ஆகிறது. தற்பொழுது எனது மகன், மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு அளிப்பதாக கேள்விப்பட்டேன். திட்டம் பற்றி விசாரித்தபோது, ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
வயது வரம்பு இல்லை என்று கூறினார்கள். இதையடுத்து நான் கரூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து தற்போது தையல் பயிற்சியை பெற்று வருகிறேன். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தேடினால் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கு'' என்று கூறியுள்ளார்.