குழந்தை பெற்று 2வது நாளில் தேர்வு - 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பழங்குடியின பெண்!
மலைவாழ் பழங்குடியினப் பெண் ஒருவர் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
பழங்குடியின பெண்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி (23). பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ள இவருக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆகியுள்ளது.
மேலும், இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதிக்கு, பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. இதையடுத்து தேர்வுக்கு முந்தைய நாளே அவருக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது.
குவியும் பாராட்டு
இருந்தும் தனது லட்சியத்தில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி, தனது கணவர் வெங்கடராமன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் பிரசவமான இரண்டாவது நாளில் சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மேலும், ஜவ்வாது மலையில் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்காக விரைவில் 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீபதி செல்ல உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.