பெண் DSPயின் முடியை இழுத்து தாக்குதல் - போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை மறியல்
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளி குமார் என்பவர் அருப்புக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்
தகவல் அறிந்த திருச்சுழி டிஎஸ்பி காயத்ரி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தை கைவிடுமாறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், டி.எஸ்.பி காயத்ரியை தள்ளிவிட்டதோடு அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். டி.எஸ்.பி காயத்ரி தாக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள்- போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இதனிடையே தாக்குதலில் காயமடைந்த டி.எஸ்.பி காயத்ரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
டி.எஸ்.பி காயத்ரியை தாக்கியது தொடர்பாக பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.