கணவனை கொன்றுவிட்டு 10 வருஷம் எஸ்கேப் - கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி!
கணவனைக் கொலை செய்துவிட்டு 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவு
கடலூர், கனகசபைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிரண்ரூபினி.
இவருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கமாகி தகாத உறவாக மாறியுள்ளது. இந்த உறவுக்கு கணவன் இடையூறாக இருந்ததால் ராஜேஷ், கார் ஓட்டுநரான அமீர்பாஷா என்பவர் உதவியுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு சம்பத்தைக் காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.
கணவன் கொலை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர். அதன் பின் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில், தனிப்படை அமைத்துத் தேடியதில் விழுப்புரத்தில் தலைமறைவாக இருந்த அமீர் பாஷாவை கைது செய்ததில்,
ராஜேஷ், கிரண்ரூபினி ஆகிய இருவரும் கேரளா, கோழிக்கோட்டில் இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸார் இருவரையும் கைது செய்தனர். சுமார் 10 வருடங்கள் இவர்கள் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.