நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை-அன்புமணி காட்டம்!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு வேதனையான எடுத்துக்காட்டு நிர்மலாவின் படுகொலை ஆகும். சின்னசேலத்தை அடுத்த திம்மவரம் சிறிய கிராமம் ஆகும்.
அங்கு வீட்டிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்த்திற்கு சென்று திரும்புவதற்குள் ஒரு பெண்ணை கொடிய மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று தான் பொருள் ஆகும்.
கொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் காவல்துறையினர் அவர்களின் அடிப்படையான புலனாய்வுத் திறனை இழந்து முடங்கிக் கிடக்கின்றனர் என்று தான் தோன்றுகிறது.
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடிய நிகழ்வுகளில் சில அறிவியல்ரீதியிலான ஆய்வுகளும், ஆதாரம் திரட்டும் பணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை திரட்டப்படவில்லை என்றால் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமாகி விடும்.
புலனாய்வுக்கு உதவும் வகையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்ட நிலையில், ஒரு கொடிய குற்றத்தை செய்தவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. குற்றவாளிகளை தப்ப வைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் தான் எழுகிறது.
பாதுகாப்பு இல்லை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கொடியவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றமும், வேதனையும் இன்னும் விலகவில்லை. அதற்குள்ளாக அதைவிட கொடிய நிகழ்வு சின்ன சேலத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையும், தமிழக அரசும் அதை மூடி மறைக்க முயல்வது வெட்கக் கேடான விஷயங்கள் ஆகும். இதற்காக அவை தலைகுனிய வேண்டும். இவற்றை வைத்து பார்க்கும் போது நாம் வாழ்வது நாடா, சுடுகாடா?என்ற ஐயம் தான் எழுகிறது.
குற்றங்கள்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதற்கு முதன்மைக் காரணம் மதுவும், கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் கிடைப்பது தான். இரண்டாவது காரணம் காவல்துறை அதன் செயல்திறனை இழந்துவிட்டது தான்.
கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல கொடிய குற்றங்களில் காவல்துறையினரால் துப்புதுலக்க முடியவில்லை. இத்தகைய வழக்குகளின் பட்டியல் மேலும், மேலும் நீண்டு கொண்டே செல்கிறது.
இத்தகைய தோல்விகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது காவல் உயரதிகாரிகள் மற்றும் அத்துறையை கவனிக்கும் முதலமைச்சரின் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.