குரூப் 4 தேர்வு சரியா எழுதல...விரக்தியில் மகளையும் தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்த தாய்!
குரூப் 4 தேர்வு சரியாக எழுதவில்லை, இருந்த வேலையும் பறிபோன விரக்தியில் தனது மகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் இறப்பு
திருப்பூர், தாராபுரம் அருகே அலங்கியம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் காளிதாஸ்(28). காளிதாஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் நூற்பாலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அலங்கியம் பகுதியில் பூங்கொடியின் தாய் சரஸ்வதி மற்றும் தனது 10 வயது மகள் வர்ஷா உடன் பூங்கொடி வசித்து வந்தார். தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பூங்கொடி வேலை செய்து வந்தார்.
குரூப் 4 தேர்வு
அவரது மகள் வர்ஷா அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பூங்கொடி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து கடந்த 24 ம் தேதியன்று மூலனூரில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை பூங்கொடி எழுதியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறியுள்ளார்.
தற்கொலை
தேர்வுக்கு தயாராகவதற்காக இருந்த வேலையையும் இழந்து விட்டதாகவும், குடும்ப வருமானத்திற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகள் வர்ஷா உடன் பூங்கொடி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த வர்ஷாவை தூக்கில் தொங்கவிட்டு, சேலையால் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சி
சரஸ்வதி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது மகள் பூங்கொடியும், பேத்தி வர்ஷாவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அலங்கியம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தாய்,
மகள் இருவரது சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.