TNPSC Group 4 Exam.. 5 நிமிட தாமதத்தால் அனுமதி மறுப்பு - கதறி அழுத தேர்வர்கள்!
திருவாரூரில் குரூப் 4 தேர்வுக்கு ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை என்று தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குரூப் 4 தேர்வு
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு திருவாரூர், கூத்தாநல்லூர், குடவாசல்,
மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய எட்டு வட்டங்களுக்கு உட்பட்ட 93 தேர்வு மையங்களில் 122 தேர்வு அறைகளில் இன்று தேர்வு நடைபெற்றது.
5 நிமிட தாமதம்
இன்று காலை சரியாக 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 35 ஆயிரத்து 646 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வட வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக ஏராளமானவர்கள் காலை முதல் வருகை தந்திருந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் காலை 9 மணிக்கு தேர்வு எழுதும் அறைக்குள் சென்று விட வேண்டும் என்கிற நிலையில் 9:05 மணிக்கு வந்தவர்களை தேர்வு எழுத காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வு துறை விதிகளின்படி உங்களை அனுமதிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை ஆகையால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் அழுதபடி அங்கிருந்து சென்றனர்.