குடிபோதையில் தகராறு செய்த கணவன் - கத்தியால் குத்திக் கொன்று நாடகமாடிய மனைவி
குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தகராறு
சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மதியழகன் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
போதை தெளிந்த உடன் வேல்முருகன் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் வினோதினி, கத்தியை நெருப்பில் காய்த்து வேல்முருகனின் உடலில் சூடு வைத்தார். இதில் வலி தாங்காமல் துடித்த வேல்முருகன், மனைவியை தாக்கினார்.
தாக்கிய மனைவி
இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி நெருப்பில் காய்ச்சி சூடாக இருந்த கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார். இதில் நிலை குலைந்த வேல்முருகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.
இதனால் வேல்முருகன் பேச்சுமூச்சு இன்றி உடல் அசைவற்று கிடந்தார். பயந்துபோன வினோதினி, ஆம்புலன்ஸ் மூலம் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவர்களிடம் குடிபோதையில் தனது கணவர் வீட்டில் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக நாடகமாடியுள்ளார்.
ஆனால் கத்தியால் குத்தப்பட்ட காயத்தை வைத்து போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்ததால் போலீசாரிடம் சிக்கிவிட்டார். தொடர்ந்து மனைவியை போலீஸார் கைது செய்தனர்.