'இந்த தேகம் மறைந்தாலும்' - இறந்தும் ஏழைகளின் மருத்துவக் கடனை அடைத்த பெண்!

Cancer United States of America World
By Jiyath Nov 21, 2023 05:00 AM GMT
Report

புற்றுநோயால் இறந்த பெண் ஒருவர் ஏழைகளின் மருத்துவ கடனை அடைக்க ரூ.1.83 கோடி நிதி திரட்டியுள்ளார். 

புற்றுநோய் பாதிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் 38 வயதான கேஸி மெக்கின்டைர். இவர் கடந்த 2019ம் ஆண்டு கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 12ம் தேதி கேஸி உயிரிழந்தார்.

மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, சிறப்பான சிகிச்சை பெறுவதற்கு பணம்தான் மிகப் பெரிய தேவையாக இருப்பதாகவும், அந்தச் சிகிச்சையைப் பெற மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் கேஸி நினைத்துள்ளார். மேலும், தன்னால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்றும் கேஸி நினைத்துள்ளார்.

இவருடைய மறைவைத் தொடர்ந்து, தன்னுடைய வாழ்வைக் கொண்டாடும் வகையில் மற்றவர்களின் மருத்துவக் கடன்களை வாங்குமாறு தாம் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கும் கேஸியின் செய்தியை அவருடைய கணவர் ஆண்ட்ரூ ரோஸ் கிரிகோரி, எக்ஸ் தளத்தில் கடந்த நவம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "இதை நீங்கள் படிக்கும்போது நான் இறந்துவிட்டிருப்பேன். உங்களில் ஒவ்வொருவரிடமும் முழு மனதாக நான் அன்பு செலுத்தினேன். நீங்கள் அனைவரும் எந்த அளவு ஆழமாக என்னை விரும்பினீர்கள் என எனக்குத் தெரியும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்!

அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் தரையிறங்கி உலக சாதனை - அதுவும் பனி ஓடுபாதையில்!

இறந்தும் உதவிய பெண்

இந்தப் பதிவுடன் பலன் கருதா தன்னார்வத் தொண்டு அமைப்பான RIP Medical Debt – ஆர்ஐபி மெடிகல் டெட் மூலம் நிதி திரட்டுவதற்கான இணைப்பும் இணைக்கப்பட்டிருந்தது. குறுகிய காலத்திலேயே அதில் 20,000 அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த நன்கொடை நிதியின் அளவு 2.20 லட்சம் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.1.83 கோடி) உயர்ந்தது. இதன் மூலம் 2 கோடி டாலருக்கும் அதிகமான, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.180 கோடி கடனைத் தீர்க்க முடியும் என்று ஆர்ஐபி மெடிகல் டெட் அமைப்பின் துணைத் தலைவர் டேனியல் லெம்பர்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேஸியின் கணவர் ஆண்ட்ரூ ரோஸ் கிரிகோரி கூறுகையில் " என் மனைவியின் சிகிச்சையின் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கான “பயங்கரமான கட்டணங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

எனவே கடந்த மே மாதத்தில் கிட்டத்தட்ட மரணத்தைச் சந்தித்த வேளையில்தான் கேஸி மெக்கின்டைரின் நினைவாக கடன் தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என இருவரும் திட்டமிட்டோம். அவள் முடிக்க விரும்பிய அனைத்தையும் அவளால் முடிக்க முடியவில்லை. ஆனால், அவளது விருப்பம் மற்றவரின் மருத்துவ கடனை அடைப்பதாக இருந்தது. அவள் விரும்பியதை நினைத்தபடி செய்தேன்’’ என்று கூறியுள்ளார். தற்போது கேஸி மெக்கின்டைரால் , பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவ கடனிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறவிருக்கின்றனர்.