கல்லூரி மாணவனுடன் மருமகள்; நேரில் பார்த்த மாமியார் - அடுத்து நடந்த சம்பவம்!
மாமியாரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மருமகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமியார் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (48). இவரது இரண்டாவது மகன் ஏழுமலைக்கு பவித்ரா (21) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.
ஏழுமலை திருப்பூரில் தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலமேலு திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அவரது மூத்த மகன் சேட்டு என்பவர் தாயரை எல்லா இடங்களிலும் தேடியுள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு தனியார் நிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சேட்டு உடனடியாக சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அலமேலுவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது மருமகள் பவித்ரா தான் இந்த கொலைக்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. மேலும் பவித்ராவின் ஆண் நண்பர் மணிகண்டன் என்பவரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
மருமகள் கைது
இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பவித்ராவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவரான மணிகண்டன் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி, அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்து அலமேலுவுக்கு தெரியவந்ததை அடுத்து, தகாத உறவை கைவிடும்படி மருமகளை கண்டித்துள்ளார்.
ஆனாலும், அதை கண்டுகொள்ளாத பவித்ரா தொடர்ந்து மணிகண்டனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடு மேய்க்கச் சென்ற பவித்ரா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் தனது மருமகளைத் தேடி அலமேலு சென்றுள்ளார். அப்போது ஒரு தனியார் நிலத்தில் மணிகண்டனும், பவித்ராவும் நெருக்கமாக இருந்ததை பார்த்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை எரித்தால் அடையாளம் தெரியாது என பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற பவித்ராவும், மணிகண்டனும் ஒன்றுமே நடக்காதது போல் இருந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.