ஆம்புலன்ஸில் நோயாளி மனைவிக்கு பாலியல் தொல்லை - கணவர் உயிரிழப்பு
ஆம்புலன்ஸில் வைத்து நோயாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவு
உத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஹரீஷ் என்ற நபர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாத நிலையில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்க்கு அவரது மனைவி முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸை அழைத்து சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர். +
ஆம்புலன்சில் பாலியல் தொல்லை
அப்போது, ஹரீஸின் மனைவியை முன் சீட்டில் அமர வற்புறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் நோயாளியின் மனைவிக்கு தனது உதவியாளருடன் சேர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
அப்போது அந்த பெண் கூச்சலிட்டதும், பின்னால் இருந்த அந்த பெண்ணின் கணவர் ஹரீஷின் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய ஓட்டுநர், அந்த பெண் மற்றும் அவரது கணவரை ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளனர். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஹரீஷின் நிலை தூக்கி வீசப்பட்டதில் இன்னும் மோசமடைந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் காவல்துறையை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். உடனே கணவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேறொரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துள்ளனர்.
நகை பறிப்பு
ஆனால் மருத்துவமனை கொண்டு சென்ற பின் அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார். மேலும், பாலியல் தொல்லை அளித்து விட்டு தன்னிடமிருந்த 10 ஆயிரம் பணத்தையும், தங்க நகைகளையும் ஓட்டுநர் திருடிச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ வடக்கு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் ஜிதேந்திர துபே தெரிவித்துள்ளார்.