அலட்சியத்தால் பிரிந்த உயிர்; பெண் இன்ஸ்பெக்டரின் உடலை சுமந்து சென்ற அதிகாரிகள்!
வேக தடையால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் பிரியாவிற்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
பெண் இன்ஸ்பெக்டர்
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதே சமயத்தில் சில பிரதான சாலையில் தேவையில்லாமல் பெரிய பெரிய வேகத்தடைகளும் அமைக்கப்படுகிறது. இந்தப் புதிய வேகத்தடைகளில் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை என்று தொடர்ந்து குற்றசாட்டு வைக்கப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பிரியா (48) பணிபுரிந்து வந்தார். சென்ற வாரம் தனது குழந்தைகளைப் பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் பிரியாவை அவரது கணவர் புல்லட்டில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
அப்போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் ஏறி தடுமாறி கீழே விழுந்ததில் பிரியாவின் தலையில் பலத்த ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் , சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
சுமந்த அதிகாரிகள்
இதையடுத்து, பெண் காவல் ஆய்வாளரான பிரியாவிற்கு நேற்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது. பிறகு அவரது உடலை இடுகாட்டுக்கு மாவட்ட எஸ்.பி, வந்திதா பாண்டே உள்ளிட்ட காவல் அதிகாரிகள் என அனைவரும் சுமந்து வந்தனர். இந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்தது.
இந்த விபத்து குறித்து அறிந்த யாரோ வேகத்தடையில் கோலப் பொடி வாங்கி தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு அடையாளம் போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியில் நிகழும் சிறிய அலட்சியங்கள் தான் இவ்வாறு உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது வேதனை அளிக்கிறது.
இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர்.