காதலனுக்காக தனியாளாக கள்ளப்படகில் வந்த இலங்கை பெண் - அடுத்து என்ன நடந்தது?
இளம்பெண் காதலனை கரம் பிடிக்க இலங்கையில் இருந்து கள்ளப்படகில் வந்துள்ளார்.
கடல் கடந்த காதல்
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தகவல் தெரிவித்தனர்.
பின் அங்குச் சென்ற கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் இலங்கை, ஆண்டான்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகனின் மகளான விதுர்ஷியா (24), 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமடைந்த நிலையில்
தனது பெற்றோருடன் அகதியாக இந்தியா வந்துள்ளார். அப்போது பழனியில் உள்ள அகதிகள் முகாமியில் தங்கியிருந்துள்ளார். பின்னர் 2016-ம் ஆண்டு தனது பெற்றோருடன் விதுர்ஷியா இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பிச் சென்றுள்ளார்.
இளம்பெண் செய்த செயல்
இந்நிலையில், அங்குக் கல்வி கற்கச் சிரமம் ஏற்பட்டதால் விமானம் மூலம் தமிழகம் திரும்பியுள்ளார். பழனிக்கு வந்த அவர் தனியாக வாடகை வீட்டில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் படித்த கவி பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் விதுர்ஷியாவின் விசா காலம் முடிவடைந்ததால் இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியா வர இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தபோது விதுர்ஷியாவுக்கு விசா மறுக்கப்பட்டது.
எனவே, விதுர்ஷியா, காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகில் தனுஷ்கோடி வந்தார். இதற்கென இலங்கை படகோட்டிகள் அவரிடம் ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு அரிச்சல்முனை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது.
தற்போது மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் விதுர்ஷியா தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.