இளம் பெண் மருத்துவரை சரமாரியாக குத்திய இளைஞன் - அரண்டு ஓடிய சக மருத்துவர்கள்..!
மருத்துவப் பரிசோதனையின் போது இளம்பெண் மருத்துவரை இளைஞர் ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளா
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் சந்தீப். இவருக்கு 42 வயது ஆகிய நிலையில், மது போதைக்கு அடிமையானதால் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், இவர் ஓர் அடிதடி வழக்கில் சிக்கி போலீஸார் நேற்று இரவு கைதுசெய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை 4:30 மணியளவில் கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, ஹவுஸ் சர்ஜனாக பணிபுரிந்து வந்த மருத்துவர் வந்தனா தாஸ் மருத்துவப் பரிசோதனை செய்திருக்கிறார்.
கொடூர சம்பவம்
இந்நிலையில், அந்த இளைஞன், திடீரென அங்கு இருந்த கத்திரியை எடுத்து மருத்துவர் வந்தனா தாஸின் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் குத்தினார்.
மேலும், அங்கிருந்த மருத்துவமனை காவலாளி, போலீஸார் உள்ளிட்டவர்களையும் குத்தியிருக்கிறார். இதற்கிடையே, அங்கிருந்தவர்கள் இவரை மடக்கிப் பிடித்தனர்.
படுகாயமடைந்த பெண் மருத்துவரை திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ''சந்தீப், போலீஸார் அழைத்துவந்த குற்றவாளிதான். போலீஸார் முன்னிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. போலீஸாருக்கும் காயம் ஏற்படும் அளவுக்கு வைலெண்டாக அவர் செயல்பட்டிருக்கிறார்.
ஹவுஸ் சர்ஜனான அந்த இளம் மருத்துவர் இந்தச் சம்பவத்தால் மிகவும் பயந்ததாக, பிற மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த மருத்துவமனை பாதுகாப்பு மிகுந்த பகுதிதான். பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
மருத்துவர்களின் பாதுகாப்புக்காக தற்போதிருக்கும் சட்டத்தை இன்னும் வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதைச் சட்டத் திருத்தமாகக் கொண்டுவர தீர்மானித்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.