ராமர் கோவில் கட்டுனாதான் பேசுவேன்; 30 ஆண்டு மெளன விரதத்தை முடிக்கும் மூதாட்டி!
ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு மூதாட்டி ஒருவர் 30 ஆண்டு கால மெளன விரதத்தை முடித்துக்கொள்ளவுள்ளார்.
ராமர் கோவில்
உத்தரப் பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, இந்தக் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த சரஸ்வதி தேவி(85) எனும் மூதாட்டி 32 ஆண்டுகளாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22-ஆம் தேதியுடன் தனது கனவு நனவாகிவிட்டதாக, அதனை முறித்துக் கொள்ளவும் உள்ளார்.
மூதாட்டி மெளன விரதம்
1986-ஆம் ஆண்டில் தனது கணவர் தேவகினந்தன் அகர்வாலை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்துள்ளார். அதன்பின், பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தரான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும் வரை மெளன விரதம் இருக்கப்போவதாக உறுதி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தினமும் 23 மணி நேரம் மவுன விரதமும், மதியம் 1 மணி நேரம் பேசிக்கொண்டும் இருந்துள்ளார்.
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மெளன விரதத்தை கடைப்பிடித்துள்ளார்.
அவர் ஒரு நாளில் 6 முதல் 7 மணிநேரங்களுக்கு தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் பால் குடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மாலையில் ராமாயணம், பகவத் கீதை போன்ற சமயப் புத்தகங்களைப் படிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.