போராட்டத்தின்போது ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்து.. பெண் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
போராட்டத்தின்போது ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்து கத்தினார் என்று பெண் எம்.பி குற்றச்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில்
பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போது அதே இடத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்தாக கூறி பாஜக எம்பிக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரே இடத்தில் இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராகுல் காந்தி நீல நிற டி-சர்ட் உடன் வந்தார். அப்போது பா.ஜ.க. எம்.பி.க்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ராகுல் காந்தி பா.ஜ.க. எம்.பி.க்களை தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்து பா.ஜ.க. பெண் எம்.பி. பாங்க்னோன் கொன்யாக், போராட்டத்தின்போது ராகுல் காந்தி தன் அருகில் வந்து கத்தினார்.
அது தனக்கு அசௌகரியமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவை தலைவருக்கு அவர் அளித்துள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது, நான் மகர் துவாரின் படிக்கட்டுக்குக் கீழே கையில் ஒரு பதாகையுடன் நின்று கொண்டிருந்தேன்.
பாதுகாப்புப் பணியாளர்கள் சுற்றி வளைத்து மற்ற கட்சிகளின் எம்.பி.க்கள் நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையை உருவாக்கினர். திடீரென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிறக்கட்சி எம்.பி.க்கள் அவர்களுக்காக ஒரு பாதை உருவாக்கப்பட்டிருந்தாலும் என் முன் வந்தார்கள்.
ராகுல் என் அருகில் வந்து உரத்த குரலில் கத்தினார். மேலும் அவர் எனக்கு மிகவும் அருகாமையில் இருந்ததால், ஒரு பெண் உறுப்பினரான நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னை நானே தற்காத்துக் கொள்ள முடியாது என்று சொல்ல முடியாது.
ஆனாலும் அது மிகவும் அநாகரீகமானது. அதனால் நான் பழிவாங்கவில்லை. இருப்பினும் இன்று அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமானவை. நான் சோர்வடைந்துள்ளேன். எந்த ஒரு பெண் உறுப்பினரும் குறிப்பாக என்னைப் போன்ற ஒரு பழங்குடி பெண் உறுப்பினரும் இந்த வழியில் உணரப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.