தலைவர்களுக்கு கை கொடுத்த சேலம் சென்டிமெண்ட் - முதல் மாநாடு..சாதிப்பாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சேலத்தில் தான் நடைபெறும் என்ற செய்திகள் அதிகமாக வெளிவருகின்றன.
சேலத்தில் மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே நடைபெறும் என்ற செய்திக்காகவே பலரும் காத்துள்ளார்கள். சினிமா வேலைகளை முடிக்கும் விஜய், உடனடியாக அரசியல் பயணத்திற்காக தயாராவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், வெளியான செய்திகளில் ஒன்று தான் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சேலத்தில் 4 இடங்களில் மைதானங்களை ஆய்வு செய்தார் என்று. லைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம், நாழிக்கல்பட்டி போன்ற இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இவை மாநாட்டிற்கான ஒரு முன்னேற்பாடாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அப்படி எதற்காக சேலத்தில் முதல் மாநாடு நடத்தவேண்டும் என்றால் அதற்கு பின்னால் ஒரு சென்டிமென்ட் இருப்பதாக கூறப்படுகிறது.
சேலம் சென்டிமென்ட்
விஷயமென்னவென்றால், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 4 இடங்களில் ஒன்றான சேலத்தின் நாழிக்கல்பட்டியில் தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ஆம் ஆண்டின் பிரச்சாரத்தை துவங்கினார்.
அத்தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. அதே போல, தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானபோதும், முதல் பிரச்சாரத்தை நாழிக்கல்பட்டியில் இருந்தே துவங்கினார்.
இவ்வளவு ஏன், நம் பிரதமர் மோடி, 3-வது முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளார் அல்லவா, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் கலந்து கொண்ட முதல் மாநாடும் இந்த திடலில் தான் நடைபெற்றுள்ளது.
தொடர் வெற்றிகள் என்பதால், அதுவும் அரசியல் தளத்திலேயே என்பதால், அங்கே முதல் மாநாட்டை நடத்தலாம் என தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டிருக்கலாம்.