சென்னைக்கு 110 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்..! இரவு வரை கனமழை நீடிக்கும் !!
இன்று நாள் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மிக்ஜாம் புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் KTCC பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை பெரிதும் பாதிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல் கரையை நெருங்க நெருங்க சென்னையில் அதிதீவிர கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றறிவு துவங்கிய கனமழை இன்று இரவு வரை நீடிக்கக்கூடும் என்றும், அதன் காரணமாக தொடர்ந்து அடுத்த 10 மணி நேரம் வரை கனமழை நீடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் KTCC பெல்ட்டில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், சென்னைக்கு கிழக்கு வடகிழக்கில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
வடக்கு வடமேற்கு திசையில் புயலானது நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற்று, அதன் பின்னர் வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க கூடும் என தெரிவித்துள்ளார்.