"துரோக சக்தி இபிஎஸ் - எந்த காலத்திலும் பயணிக்க மாட்டேன்" - டிடிவி தினகரன் உறுதி..!!
அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
டிடிவி உரை
திண்டுக்கல் மாவட்டத்தில் கிழக்கு மேற்கு மாவட்ட அமமுக பூத் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசும் போது, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக மட்டும் தான் இருந்தது என்று கூறி, ஆனால், அமமுக-வுக்கு எதிராக பல எதிரிகளும், துரோகிகளும் இருக்கின்றனர் என்றார்.
நமக்கு நண்பர்களாக இருந்தவர்கள், பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இபிஎஸ்'ஸுடன் கைகோத்து இருக்கின்றனர் என்று தெரிவித்த டிடிவி, துரோகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட அதிமுக தற்போது துரோகிகளின் கைகளில் உள்ளது என்றார்.
அப்படிப்பட்ட துரோகியான இபிஎஸ்ஸுடன் ஒரு போதும் பயணிக்க மாட்டேன் என உறுதிபட தெரிவித்த டிடிவி தினகரன், அதனை மீட்டெடுக்காமல் விட மாட்டோம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக திருந்தி விட்டது என மக்கள் நினைத்து வாக்களித்து ஆட்சிப் பொறுப்பை கொடுத்த நிலையில் தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.