தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்?அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா என்பதற்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
பேருந்து கட்டணம்
ஈரோடு பேருந்து நிலையத்தில் ன15 புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்று முடிந்தது. விழாவில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது, "மொத்தமாக 7 ஆயிரத்து 200 பஸ்கள் புதிதாக கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வாரத்துடன் 1,300 பஸ்கள் புதிதாக இயக்கப்படும்.
மீதி பஸ்களை தயாரிப்பு நிறுவனம் வழங்க வழங்க அவை உடனடியாக பழைய பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அதுபோல பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்க்கட்சிகள் கூறுவது அவர்களின் கருத்து.
அவர்களின் விருப்பம் அதுவாக இருந்தால், அதற்கு பதில் கூற நாங்கள் தயாராக இல்லை. தனியார் பஸ்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும், அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதுபோன்ற புகார்கள் வந்தால் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.
முக்கிய தகவல்
போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மற்ற போக்குவரத்து கழகங்களில் ஓரிரு மாதங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
கியாஸ் மூலம் இயங்கும் 8 பஸ்கள் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் 500 பஸ்கள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் முதலில் 100 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மினிபஸ்கள் கூடுதலாக இயக்குவது குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு,
மக்களின் கருத்தை பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந் தேதி உள்துறை செயலாளர் மக்களின் கருத்தை பெறுகிறார். முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் ஒப்புதல் பெற்று மினிபஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுகஆட்சியில் புதிய டிரைவர்-கண்டக்டர்கள் நியமனம் செய்யப்படாததால் 2 ஆயிரம் வழித்தடங்களில் பஸ் இயக்கவில்லை. தற்போது புதிய நியமனங்கள் மூலம் 800 வழித்தடங்களில் பஸ்களை இயக்கப்படுகிறது. விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.