எனக்கு நம்பிக்கை இருக்கிறது...இம்முறை மோடியை வீழ்த்தியே தீருவோம் - சூளுரைத்து ராகுல் காந்தி..!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்தியா கூட்டணி
தேசிய அளவில் பெரும் ஆளுமை கொண்ட கட்சியாக விளங்கிய காங்கிரஸ், கடந்த 10 ஆண்டுகளாக வென்றிடமுடியாமல் போனது. மாநில தேர்தல்களிலும் பின்னடைவை சந்தித்தது.
ஆனால், தேர்தல் நெருங்கிய காலத்தில், காங்கிரஸ் கட்சி கர்நாடகா - தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் வெற்றி பெற்று தன்னுடைய ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளது. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக இருக்கும் பல கட்சிகளை திரட்டி இந்தியா கூட்டணியும் உருவானது.
காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மீ, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்ரே, சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என பல கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்று பாஜகவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது.
தேர்தல் அறிக்கை
கூட்டணி இறுதியான நிலையில், இன்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமானதாக மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வு மாற்றப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சில தேர்தல் அறிக்கையை வருமாறு,
- NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
- குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
- பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
- தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
- 2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு.
- மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
- 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
- இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
- ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
- ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
- அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
- பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
- பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ரூ.1000 ஆக அதிகரிப்பு.
ராகுல் சூளுரை
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்து, இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததைப் போல் ஊடகங்களில் காண்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்ட உணர்வுதான் தற்போதும் உள்ளது என சுட்டிக்காட்டி, வாஜ்பாய் காலத்தில் இந்தியா ஒளிர்வதாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டபோது யார் வென்றது என்பது நினைவிருக்கும் என நினைவூட்டினார்.