முற்றும் மோதல் - இந்தியா மீது பொருளாதார தடையா? கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா
இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து கனடா வெளியுறவு துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நிஜ்ஜார் கொலை
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டது.
பொருளாதாரத் தடை
தற்போது அந்த விவகாரத்தை மீண்டும் கனடா கையில் எடுத்துள்ளது. நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள 6 கனடா அதிகாரிகளை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு கனடா அரசு உத்தர விட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்தியா மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்குமா என்ற கேள்விக்கு, எல்லாம் மேஜையில் உள்ளது என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி பதிலளித்துள்ளார்.
அமெரிக்கா ஆதரவு
"நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இது தொடர்பான விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சீக்கிய கட்சியின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.