கனடா திடீர் அறிவிப்பு; இந்திய மாணவர்கள் கலக்கம் - என்ன பின்னணி!
விசா வழங்குதல் குறித்த முக்கிய அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது.
நுழைவு விசா
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, உக்ரைன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன்படி, சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பயின்று வருகின்றனர். இந்நிலையில், கனடாவில் படிக்க சர்வதேச மாணவர்களுக்கு வழங்கும் நுழைவு விசா எண்ணிக்கையை அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது.
பெரிய சிக்கல்
பிற நாட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக பேசிய கனடாவின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், ”அதிகளவில் பிற நாட்டவர்கள் கனடா வருவதால், அவர்கள் தங்குவதற்கு போதிய வீடுகள் இல்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு கனடாவில் படிப்பதற்கு வழங்கப்பட உள்ள புதிய அனுமதி ஆவணங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு இறுதியில் மறு மதிப்பீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கனடா நாடு முதல் தேர்வாக இருப்பதால் இந்த அறிவிப்பு கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.