இலங்கை அதிபரான அனுர குமார - அதானிக்கு உருவான சிக்கல்
இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்டது இந்திய தொழிலதிபர் அதானிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தேர்தல்
இலங்கையில் நேற்று முன்தினம்(21.09.2024) அதிபர் தேர்தல் நடைபெற்றது. 2022 பொருளாதார நெருக்கடிக்கு பின் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலை வகித்து வந்தார். வேட்பாளர்கள் யாருக்கும் 50% வாக்குகள் கிடைக்காத நிலையில் இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டது.
அனுர குமார திஸாநாயக்க
இதிலும் முன்னிலையில் இருந்த அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இலங்கையில் 75 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சியின் வேட்பாளர்களே அதிபராக பதவி வகித்து வந்த நிலையில், முதல் முறையாக இடது சாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் காற்றாலைகளை அமைக்க, இந்தியாவைச் சேர்ந்த அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கையின் முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது. இந்த திட்டம் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை 20 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதாக இலங்கை அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
அதானி திட்டம்
சீனாவுக்கு வழங்கப்படுவதாக இருந்த இந்த திட்டம் இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்பால் அதானிக்கு வழங்கப்பட்டது.சுற்றுசூழல் காரணம், அதிக விலை என்ற காரணத்தை காட்டி இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்பு எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அநுர குமார திஸாநாயக்க, "இந்தியாவை சேர்ந்த அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்புதல், நம் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த ஒப்புதலை ரத்து செய்வோம்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அநுர குமார அதிபர் ஆகியுள்ள நிலையில் அதானியின் திட்டத்தை ரத்து செய்வாரா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.