தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவி மாற்றம் செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக கூட்டணி 293 இடங்களை பெற்றுள்ளது. பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான 272 இடங்களை தனித்து பெறாத நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்க்கான வேளையில் பாஜக தலைமை தீவிரமாக இறங்கி உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி, அமித்ஷா உள்ள பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தனர். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் அதையே கூறின.
இந்நிலையில் பாஜக தனது கோட்டையான உத்தர பிரதேசத்திலே மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 36 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கு கடந்த முறை 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்றம்
மேலும், கடந்த 20 வருடங்களாக தமிழகத்தில் பாஜகவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாத நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது. இதற்கு முன்பு 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2019 பாராளுமன்ற தேர்தளிலும் அதிமுக பாஜக கூட்டணியிலே இருந்தது. 2019 ல் தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால், அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பின், பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று வருவதாகவே அக்கட்சியினர் கருதி வந்தனர்.
அதற்கேற்ப அண்ணாமலையும் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பு, ஆளும் திமுக அரசு மீதான தொடர் விமர்சனம் என பாஜகவை எப்பொழுதும் பேசு பொருளாகவே வைத்திருந்தார்.
கூட்டணி முறிவு
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் பாஜகவுடன் அமைத்த கூட்டணி தான் என்று அதிமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையில் ஆளும் திமுக அரசு மீது விமர்சனம் மீது வைத்து மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான மறைந்த அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு வைத்தார் .
இதற்கு கூட்டணி கட்சியான அதிமுக தரப்பிலிருந்தே அண்ணாமலைக்கு கண்டனம் வந்தது. இதன் பின் பாஜக அதிமுக உறவு சுமூகமாக இல்லாமல் இருந்து வந்தது. இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இல்லாது பிற கட்சிகளை இணைத்து போட்டியிட்ட பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு தொகுதிகளில் கூட வெல்லவில்லை. சில தொகுதிகளில் டெபாசிட் கூட இழந்தது. வெற்றி பெறுவார் என்று தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாநில தலைவர் அண்ணாமலை கூட 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மாநில தலைவர் பதவி
அதிமுக கூட்டணி முறிவே தமிழ்நாட்டில் பாஜகவின் இத்தகைய நிலைக்கு காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூட்டணி முறிவுக்கு காரணமான அண்ணாமலை கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவாரா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே கருதப்படுகிறது.
ஆனால் கடந்த தேர்தல்களை விட பாஜகவின் வாக்கு சதவீதத்தை 11.24% க்கு உயர்த்தியுள்ளார் அண்ணாமலை. மேலும் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு கூட்டணி ஒன்றையும் உருவாக்கி உள்ளார். இந்நிலையில், இதற்கு முன்பு மாநில தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் போல் மத்திய அமைச்சர் பதவியோ, ஆளுநர் பதவியோ அளிக்கப்பட்டு, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் தற்போது ஆட்சி அமைப்பதற்கான வேளைகளில் பாஜக தலைமை மும்முரமாக உள்ளதால், பதவி மாற்றம் கால தாமதம் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.