தட்டிக்கேட்ட மனைவி; ஆத்திரத்தில் கணவன் வெறிச்செயல் - கதறும் பிள்ளைகள்!
மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிப்பழக்கம்
திருப்பூர், பல்லடம் சின்னக்கரை லட்சுமி நகரில் வசித்து வந்தவர் சிலம்பரசன். இவரின் மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டுகளாக சிலம்பரசன் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சிலம்பரசன் தூக்கிட்ட நிலையிலும், அகிலாண்டேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கணவன் கொடூரம்
அதன் அடிப்படையில் விரைந்த போலீஸார் இருவரின் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிலம்பரசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிலம்பரசன் அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் கத்தியால் அகிலாண்டேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மேலும் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.