கணவர் கோமாவில் இருக்கிறார் - அழுகிய உடலோடு ஒன்றரை ஆண்டு வாழ்ந்த மனைவி
இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
உத்தரப்பிரதேசம், கான்பூரைச் சேர்ந்தவர் விமலேஷ் தீக்ஷித். இவர் வருமான வரித்துரை அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது சக பணியாளர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தீக்ஷித் குடும்பத்தினர் அவர் இறக்கவில்லை என்றும், கோமாவில் இருப்பதாகவும் நம்பினர்.
ஏற்க மறுத்த மனைவி
அதோடு தீக்ஷித் உடலை தங்களது வீட்டுக்குக் கொண்டுவந்து பாதுகாத்துவந்தனர். கோமாவிலிருந்து மீண்டுவிடுவார் என்று குடும்ப உறுப்பினர்கள் கருதினர். அவர் மனைவிக்குச் சற்று மனநிலை சரியில்லை.
அதனால், தீக்ஷித் உடலுக்கு அவர் மனைவி தினமும் கங்கை புனிதநீரைத் தெளித்து வந்திருக்கிறார். இது ஒன்றரை ஆண்டாக நடந்துவந்திருக்கிறது. இதனிடையே, உயிரிழந்த தீட்சித்தின் பென்ஷனுக்கு யாரும் விண்ணப்பிக்காததை அவரது சக அலுவலர்கள் கவனித்துள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்
பின்னர், அவர்கள் போலீஸாருடன் தீட்சித்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, வீட்டின் மாடி அறையில் தீட்சித்தின் அழுகிய உடலுடனும், கடும் துர்நாற்றத்துடனும் அவரது மனைவி பூஜா ராணி வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரது உடலை அவர்கள் அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், தனது கணவர் இறக்கவில்லை. அவரை எங்கும் கொண்டு சென்றுவிடாதீர்கள் என அவரது மனைவி அவர்களிடம் கெஞ்சினார்.
இதையடுத்து, ஒரு மருத்துவரை அழைத்து வந்து அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்த பின்னரே தீட்சித்தின் உடலை எடுக்க அவர் அனுமதித்தார். இதன் தொடர்ச்சியாக, அவரது உடல் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.