மீனாட்சி அம்மன் கோவில்; கணவனை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாதா? நீதிமன்றம் காட்டம்
செங்கோல் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
செங்கோல் வழங்குதல்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் 8 வது நாள் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிேஷகத்தில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்நிலையில், கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவர், கணவரை இறந்தவர் செங்கோலை பெற்று கொள்ள முடியாது. தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி உள்ளார். இவர் கணவரை இழந்தவர்.
ஆகம விதி?
இதனால் செங்கோலை அவருக்கு பதிலாக உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அமர்வு, ‛கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என்று ஆகம விதிகளில் எங்கு உள்ளது?
ஆகம விதியில் எந்த இடத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே?
விழா தொடங்கிய பிறகு இறுதிக்கட்டத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. இந்த காலத்திலும் இதுபோன்ற காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.