நான், விராட் கோலி உள்ளிட்டோர் பந்து வீசியது இதனால்தான் - ரோஹித் ஷர்மா விளக்கம்!
இந்தியா-நெதர்லாந்து இடையேயான போட்டியில் பேட்ஸ்மேன்கள் பந்து வீசியது ஏன் என்பது குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி பும்ரா, சிராஜ், முகமது சமி, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய 5 பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. ஆனால் நடந்து முடிந்த இந்தியா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் பந்து வீசினர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர். இது இந்திய ரசிகர்களிடையே புதுமையை ஏற்படுத்தியது. மேலும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
ரோஹித் ஷர்மா விளக்கம்
இந்நிலையில் எல்லோரையும் பந்து வீச வைத்தது ஏன்? என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் "இது போன்ற சில விஷயங்களை செய்து பார்க்க வேண்டும் என எங்கள் மனதில் இருந்தது.
இதுபோன்ற வாய்ப்புகளை அணியில் உருவாக்க விரும்பினோம். தற்போது எங்கள் அணி 9 பேர் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் நாங்கள் சில விசயங்களை முயற்சி செய்து பார்த்தோம்.
வேகப்பந்து வீச்சாளர்கள் வைடு யார்க்கர்கள் வீசினார்கள். இது தேவையில்லை. என்றாலும் அவர்கள் செய்து பார்த்தார்கள்'' என்று கூறியுள்ளார். ரோஹித் ஷர்மா சுமார் 7 வருடங்கள் கழித்து பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.