நான் சொன்னது தவறு.. வருந்துகிறேன் - விராட் கோலி விவகாரத்தில் இலங்கை கேப்டன் விளக்கம்!
விராட் கோலி விவகாரத்தில் இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
விராட் கோலி சதம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்க இடையேயான போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஒருநாள் போட்டியில் தனது 49வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
அந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸிடம் பத்திரிக்கையாளர்கள் "விராட் கோலி 49வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு நீங்கள் வாழ்த்து கூற விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
நான் சொன்னது தவறு!
அதற்கு பதிலளித்த குசல் மெண்டிஸ் "நான் எதற்கு விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லணும்? என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். இதனால் அவரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குசல் மெண்டிஸ் "செய்தியாளர்கள் சந்திப்பின் போது நான் 49வது சதத்தை விராட் கோலி அடித்தார் என்பதை அறியாமல் இருந்தேன்.
அந்த சமயத்தில் செய்தியாளர் திடீரென என்னிடம் கேட்டதால் அந்த கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாத நான் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினேன். நீங்கள் 49 சதங்கள் அடிப்பது சுலபமல்ல. எனவே அன்றைய நாளில் நான் சொன்னது தவறு. அதற்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.