பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட காரணம் இதுதான் - சுவாரஸ்ய பின்னணி!
மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய பட்ஜெட்
3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மத்திய பட்ஜெட் நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
பின் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1ல் ஏன்?
1999ம் ஆண்டு வரை மாலை 5 மணிக்கு தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது. பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காலை 11 மணியாக மாற்றியது. 2017 ம் ஆண்டுக்கு முன்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பட்ஜெட்டானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
திடீரென்று கடந்த 2017ல் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 2017 ல் மறைந்த அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்தார். பிப்ரவரி கடைசியில் பட்ஜெட் தாக்கல் செய்தால் புதிதாக பிறக்கும் நிதியாண்டான ஏப்ரல் 1ம் தேதிக்குள் பட்ஜெட் அறிவிப்பின் அம்சங்கள்,
விதிகளை பின்பற்ற போதிய காலஅவகாசம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே மோடி தலைமையிலான அரசு பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நடைமுறையை மாற்றி அமைத்தது. இதன்மூலம் பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான அம்சங்களை பின்பற்ற கூடுதல் காலஅவகாசம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.