டிரெண்டாகும் #uninstallPhonepe - என்ன காரணம் தெரியுமா?
டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வழங்கும் Phonepe செயலியை uninstall செய்ய கோரி எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகா
இரு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில், நிர்வாக பணிகளில் 50 சதவீதமும், நிர்வாக அல்லாத பணிகளிலும் 75 சதவீதமும், டி மற்றும் சி பணிகளில் 100 சதவீதமும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பெங்களூரு இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் தலைநகராக விளங்குகிறது. இங்கு கூகிள், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம் போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல மாநில, நாடுகளில் இருந்தும் உள்ள ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கர்நாடக அரசின் இந்த முடிவு பல நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
போன் பே
இந்நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் பிரபல நிறுவனமான போன் பேவின் (Phonepe) சி.இ.ஓ ஆக சமீர் நிகம் செயல்பட்டு வருகிறார். அரசின் இந்த முடிவு குறித்து சமீர் நிகம் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, "எனக்கு 46 வயதாகிறது. என் வாழ்நாளில், 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாநிலத்தில் நான் வசித்தது இல்லை. காரணம், என் தந்தை கடற்படையில் பணியாற்றினார். அதனால், நாடு முழுதும் அவருக்கு பணியிட மாற்றம் வரும். பல ஊர்களில் வசித்துள்ளேன்.
I am 46 years old. Never lived in a state for 15+ yrs
— Sameer.Nigam (@_sameernigam) July 17, 2024
My father worked in the Indian Navy. Got posted all over the country. His kids don't deserve jobs in Karnataka?
I build companies. Have created 25000+ jobs across India! My kids dont deserve jobs in their home city?
Shame.
கர்நாடக அரசு அறிவித்த இட ஒதுக்கீடு மசோதா, என்னை போன்ற ஆட்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது. என் நிறுவனத்தின் வாயிலாக நாடு முழுதும் 25,000 வேலை வாய்ப்புகளை அளித்துள்ளேன்.என் பிள்ளைகள் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்கள். இருந்தும், அவர்கள் இந்த மண்ணில் வேலை பெற தகுதியற்றவர்கள் என்பது வெட்கக்கேடு. என கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் தளத்தில் #uninstallPhonepe, #BoycottPhonepe போன்ற ஹாஸ்டேக் மூலம் சமீர் நிகம் பதிவுக்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.