தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை - சட்டம் கொண்டு வரும் கர்நாடக அரசு

Karnataka Bengaluru
By Karthikraja Jul 17, 2024 06:34 AM GMT
Report

தனியார் நிறுவனங்களில் கன்னட மக்களுக்கே 100% இட ஒதுக்கீடு என்ற மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகா

இந்தியாவின் பல மாநிலங்களில் அந்த மாநில அரசு மற்றும் தனியார் பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்ற கோரி பல அமைப்புகள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன. பல மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு பின்னர் இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது எனக்கூறி நீதிமன்றங்கள் இச்சட்டங்களை நீக்கியுள்ளன. 

karnataka assembly

இந்நிலையில் ஜூலை 15 ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு

இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் நிர்வாக பணிகளில் 50 சதவீதமும், நிர்வாக அல்லாத பணிகளிலும் 75 சதவீதமும், டி மற்றும் சி பணிகளில் 100 சதவீதமும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். 

siddaramaiah

மேலும், யார் எல்லாம் இந்த இட ஒதுக்கீடுக்கு தகுதியானவர்கள் என கர்நாடக அரசு வரையறுத்துள்ளது. இதன் படி , "கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் திறன் கொண்டவர் இதற்கான தகுதியான நபர். கன்னடத்தை ஒரு மொழியாகக் கொண்ட மேல்நிலைப் பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அது இல்லையெனில், கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோடல் ஏஜென்சியால் குறிப்பிடப்பட்ட கன்னட புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தகுதியுடைய உள்ளூர் நபர்கள் கிடைக்காத நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து, உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என மசோதா கூறுகிறது. இந்த மசோதாவை ஏற்காத நிறுவனங்களுக்கு ரூ10,000 முதல் ரூ25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

சித்தராமையா

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சி மற்றும் டி கிரேடு பணிகளுக்கு முழுவதுமாக கன்னடர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தும் மசோதாவுக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கன்னடர்கள் தங்களின் கன்னட நிலத்தில் வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். நாங்கள் கன்னட மக்களுக்கான அரசு. அவர்கள் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில், கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் எஸ் தங்கடகி சட்டமன்றத்தில், கர்நாடகாவில் செயல்படும் அனைத்து MNC நிறுவனங்களும் அறிவிப்புப் பலகைகளில் அங்கு பணிபுரியும் கன்னடர்களின் எண்ணிக்கையை காட்ட வேண்டும், தவறும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்படும் என்று கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் எஸ் தங்கடகி சட்டமன்றத்தில் அறிவித்தார்.